பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 22 மே, 2015

" மாலை முரசு - மனசெல்லாம் சொகுசு"

வெற்றி கொட்டும் !!


நண்பர்களே,

எங்கள் ஊரின் பல சிறப்புகளுள், கோவில்கள், மருத்துவ கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், காவலர் கல்லூரிகள், சங்க இலக்கியங்களில் பாடப்பட்ட ஆறு, மலைகள்,வரலாற்று சிறப்பு மிக்க , எங்கள் ஊரையும் பக்கத்திலுள்ள ஊரையும் இணைக்ககூடிய சுரங்கபாதைகள் கொண்ட பழங்கால அதே சமயத்தில் இன்னும் கம்பீரமாகவும் வலிமையுடனும் காணப்படும் உபயோகபடுத்தபட்டு கொண்டிருக்கும்  கட்டிடங்கள் போன்றவற்றிற்கு அடுத்து,

எங்கள் ஊர்  மக்களின் வாழ்வோடு இரண்டற கலந்து நன்மைதிப்போடு திகழும் இரண்டு நிறுவனங்களுள் ஒன்று " தினத்தந்தி" நிறுவனம், மற்றொன்று "மாலை முரசு" நிறுவனம் என்றால் அது நெல்லின் முனை அளவு மட்டுமின்றி எள்ளின் முனை அளவும் மிகை அல்ல.

Image result for PICTURES OF MAALAI MURASU BUILDING

காலை நான்கு மணிக்கெல்லாம், பரவலாக எல்லோர் வீடுகளையும், திறக்கபடாத அலுவலக வளாகங்களையும், ஏறக்குறைய எல்லா தேநீர் கடைகளையும் வந்து சேரும் பத்திரிகை "தினத்தந்தி".

நடை திறந்தவுடனே சாமி தரிசனத்திற்க்கென முட்டி மோதி முதல் வரிசையில் நின்று நமஸ்கரிக்கும் பக்க்தர்கள்போல், கடை திறந்தவுடன் தினத்தந்தியின் வருகைக்காக காத்திருக்கும் வாசகர்களின் கூட்டமும் எல்லா தேநீர் கடைகளிலும் நிரம்பி வழியும்.

மூலையில் இருக்கும் முடிதிருத்தும் கடைகள் முதல், பெரும்  மூலதனம் இட்டு தொடங்கி நடத்தபட்டுகொண்டிருக்கும் பெரிய பெரிய நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள்,நூலகங்கள் என்று எங்கும் என்றும் காணக்கூடிய , மக்கள் மிகமிக விரும்பி மட்டுமல்ல, நேசித்தும் வாசித்தும் வரும் பத்திரிக்கைகள் "தினத்தந்தி"யும் "மாலை முரசு"ம்.

இந்த இரண்டு பத்திரிக்கைகளின் நிறுவனங்கள் எங்கள் ஊரின் மைய பகுதியில் அமைந்து நகரின் பெருமைகளுக்கு பெருமை சேர்த்து  கொண்டிருக்கின்றன.

logo

இவை இரண்டும் செய்யும் மக்கள் சேவை சொல்லில் அடங்காது.

குறிப்பாக,தேர்தல் நேரங்களிலும், தேர்வு நேரங்களிலும் இவற்றின் சேவைகளும்  மக்களுக்கு இவற்றின் தேவைகளும் அளப்பரியது.

அதிலும் தேர்வு முடிவுகளை ஒரு நாள் முன்னதாகவே தெரிந்துகொள்ள வழி வகை செய்யும் "மாலை முரசுவின்" சேவை மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் கிடைத்த ஒரு வர பிரசாதமாகும்.

இப்போதுகூட, நேற்றைய தினம் வெளி இடப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் எல்லோரையும் காட்டிலும் முன்னதாகவே மாலை முரசு அறிவித்து செய்தி வெளி இட்டு இருக்கும், அதை தொடர்ந்து தினத்தந்தி மறு நாள் வெளியிட்டு மக்கள் சேவை புரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.

இந்த வருட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளி வந்திருக்கும் இந்த சமயத்தில் பல வருடங்களுக்கு முன் நானும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள "மாலைமுரசு" அலுவலக பிரதான இரும்பு கதவுகளுக்கு  வெளியில் "ஆயிரத்தில் ஒருவனாக" காத்து நின்றதும், உடன் வந்திருந்த என் நண்பன் உள்ளிருந்து வெளியில் வரும் ஊழியர்களிடம் " அண்ணே பேப்பர் பிரிண்ட் ஆயிடுச்சா? எப்போ வெளியில் வரும்?" என்று கேட்டுகொண்டிருந்ததையும் , அவனிடம் "இதோ இன்னும் பத்து நிமிடங்களில் வந்துவிடும்" என்று பத்து தடவைகளுக்கு மேல் பத்து அண்ணன்கள் சொல்லி சென்றதும் என் நினைவில் அச்சடித்தவண்ணம் நிழலாடுகின்றது. 

ஒரு வழியாக ஒரு பத்திரிகை எங்கள் கைகளுக்கு வந்ததும் அதை மற்ற மாணவர்கள் அவர்களின் பெற்றோர்களைபோல அங்கேயே பிரித்து பார்த்து கொள்ளாமல், வேகமாக சைக்கிளை மிதித்துகொண்டு வீடு வந்து என்னுடைய பெரிய அக்காவிடம் கொடுத்து எண்களை பார்க்கும்படி கூறினோம்.

என் அக்கா முதலில் என் நண்பன் ராஜேந்திரனின் தேர்வு எண்ணை கேட்க்க பதட்டத்தில் வார்த்தை வராமல் நண்பன் திக்கித்திக்கி தவறாக எண்களை சொல்ல அந்த எண்கள் செய்தி தாளில்  இல்லாமல் போக , சோகத்துடன் அழ ஆரம்பித்த நண்பனை ஆசுவாசபடுத்தி நிதானமாக யோசித்து சொல்ல சொன்ன பிறகு;

 அவன் சொன்ன எண்கள் பத்திரிகையில் இருந்ததை கண்டு ஆனந்த கண்ணீர் விட்டதை  கேலி செய்தபடி,  என்னுடைய  எண்ணை ஏன் பார்க்கவேண்டும் எப்படியும் என் தம்பியின் எண்கள் இல்லாமலா போய்விடும் நான் தான் ஒவ்வொரு தேர்விற்கு  முன்னும் பயிற்று வித்து கேள்விபதில்களை தயார் படுத்தி அனுப்பி தேர்வு முடிந்தபின்னர் எழுதிய பதில்களை கேட்டறிந்து பரீட்சை முடிவுகளை முன்னமே தீர்மானித்து விட்டேனே, 

பின் ஏன் எண்களை பத்திரிகையில் பார்க்கவேண்டும் என்ற மேலான எண்ணத்தில் ஏனோ தானோ என ஒரு சம்பிரதாயத்திற்க்காக - என் நண்பனின் ஆவலின் மிகுதியால் என்னுடைய எண்களை பார்க்க ஆரம்பித்தவரின்  கண்களில் ஒரு மிரட்சி, நெஞ்சில் ஒரு படபடப்பு,  கைகளில் நடுக்கம்.

 மீண்டும் பக்கங்களை புரட்டியும், என்னுடைய ஹால் டிக்கெட்டில் இருந்த எண்களை மீண்டும் மீண்டும்  சரிபார்த்தும் என்னுடைய எண்கள் அந்த பத்திரிகையில் இல்லாமல் இருந்ததை கண்டு இப்போது என்னுடைய  வீட்டில் இருந்த அனைவரும் சோகமடைந்ததையும் என் கண்ணில் தெரிந்த ஏமாற்றத்தையும்  ஏக்கத்தையும் பார்க்க முடியாமல் அதே சமயத்தில் பத்திரிகையில் என்னுடைய எண்கள் வராமல் போனதை நம்ப முடியாமலும் என் தோளில் மீது தன் கரங்களை   வைத்து  என்னை இறுக்க அணைத்துகொண்டார் என் அம்மா.

ஒரு பக்கம் சோகம், ஒருபக்கம், ஏமாற்றம், ஒருபக்கம் அவமானம் இப்படி மூன்று பக்கங்கள் என்னை மூச்சு முட்டுமளவிற்கு இறுக்கி கொண்டாலும் எஞ்சி இருந்த அந்த நான்காவது(??) பக்கம் மட்டும் -  (என் மனம்) நெஞ்சோடு சொன்ன செய்தி ,"பரீட்ச்சையில் பக்கம் பக்கமாக எழுதிய நீ தோல்வி அடைய எந்த வாய்ப்பும் இல்லையே பின் ஏன்  உன் எண்கள்  இந்த பத்திரிக்கையின் எந்த பக்கத்திலும் வர வில்லை?, இதில் ஏதோ தவறு நிகழ்ந்திருக்க வேண்டும், திடன் கொள் மனம் தளராதே, இது மாலை முரசு என்பதால் கொஞ்சம் அவசரப்பட்டு வெளியிடப்பட்டதால் உன் எண்கள் பிழையாக விடப்பட்டிருக்கும், நாளை காலை தினத்தந்தியில் தெளிவாக நிதானமாக அச்சிடப்பட்டு வெளி வரும் கொஞ்சம் பொறுமையாக இரு".

சரி வீட்டில் இருந்த அம்மா அக்கா, எல்லோருக்கும் தெரிந்து விட்டது, இனி வெளியில் சென்றிருக்கும் ஆசிரிய(ர்) அப்பா வந்தால் சூழ்நிலை என்னவாகும், இப்படியும் என் மனம் கொஞ்சம் அங்கலாய்த்துகொண்டிருந்த வேலை அப்பா வருகின்றார், கையில் ஒரு மஞ்சள் பையும் கூடவே ஒரு  "மாலைமுரசுடன்" .

பயத்தில் இருந்  நான் அப்பாவின் முகத்தை எப்படி பார்ப்பேன், திட்டுவாரோ, அடிப்பாரோ என அஞ்சி அம்மாவின் பின்னால் வந்து மறைந்து நின்றுகொண்டேன், கூடவே நண்பன் ராஜேந்திரனும் என்னோடு இருந்தான்.

வந்தவர் என்னை அழைத்து கையிலிருந்த மஞ்சள் பையை கொடுத்து தலையில் கைவைத்து , உள்ளே இருப்பதை பிரித்து எல்லோருக்கும் கொடுக்க சொன்னார்.

எனக்கு ஒன்றுமே  புரியாமல் உள்ளே என்ன இருக்கின்றது என பார்க்க அது, "அன்னு குட்டி மிட்டாய் கடை" மூங்கில் கூடையில் அடுக்கி வைக்கபட்டிருந்த "லட்டுகள்".

பாஸ் பண்ணி விடுவேன் என்ற நம்பிக்கையில் இனிப்பு வாங்கி இருக்கின்றார், முடிவு வேறு மாதிரியாகிவிட்டபோதிலும் வாங்கிய இனிப்புகள் வீனாககூடாது என்பதற்காக எல்லோருக்கும் கொடுக்க சொல்கின்றார் போலும், என நினைத்து அதை அப்படியே அம்மாவிடம் கொடுத்து விட்டு நான் அறைக்குள் சென்று விட்டேன் , அப்பா  ராஜேந்திரனுடன் பேசி கொண்டிருந்தது மட்டும் தெளிவாக கேட்டது.

" என்ன ராஜந்திரன், பாஸ் பண்ணிட்டது பெருசு இல்ல, எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்கின்றீர்கள் என்பதுதான் முக்கியம், எவ்வளவு மார்க்குகள் வரும்" என கேட்க்க, அவனோ, ஒரு 350 இலிருந்து 400 வரை வரும் என்றான்.

பிறகு "உன் நண்பன் "கோ" விற்கு எத்தனை வரும்" என கேட்க்க, அவனோ என்ன சொல்வது என விழித்துகொண்டிருக்க , கண்களில் பெருக்கெடுத்த கண்ணீரோடு நான் அறையை விட்டு வெளியில் வந்து அப்பாவின் முன் நின்று தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விட்டேன்.

அப்பாவும் என்னிடம், பரவாயில்லை, "400 க்கு குறையாமல்  எத்தனை மதிப்பெண்கள் வந்தாலும் நல்லதுதான், அழ வேண்டாம்" என கூறி வாங்கி வந்திருந்த லட்டில் ஒன்றை பாதியாக பிட்டு எனக்கும் நண்பன் ராஜேந்திரனுக்கும் ஆளுக்கு பாதி கொடுத்து சாப்பிட சொன்னார்.

வீட்டில் உள்ளவர்கள்  மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல்  (லட்டை அல்ல என் லட்ச்சனத்தை) திகைத்தனர்.

அப்போது அப்பா வாங்கி வந்திருந்த மாலை முரசு பத்திரிகை தேர்வு முடிவுகள் இருந்த பக்கத்தில் பேனாவில் ஒரு இடத்தில் வட்டம் போட்டு வைத்திருந்ததை அம்மா பார்த்துவிட்டு , ஒரு பெருங்குரலெடுத்து கத்தி என்னை இறுக்கமாக கட்டி அனைத்து முத்தமிட்டு "என் மகன் பாஸ் பண்ணி விட்டான் என் மகன் பாஸ் பண்ணி விட்டான்" என கூற அப்பாவிற்கும் எனக்கும் ஒன்றுமே புரியாமல் போக என் அக்கா வட்டமிடபட்ட அந்த எண்களை பார்க்க அதில் 481-498 என்று இருந்ததை கண்டு அதாவது 481 இலிருந்து 498 வரை உள்ள அத்தனை பேரும் தேர்ச்சி பெற்ற விவரத்தை உணர்ந்து முதலில் பார்க்கும்போது 481 அதற்க்கு பிறகு 498 மட்டுமே தேர்ச்சி பெற்றதாக தவறாக புரிந்து கொண்ட விவரத்தை (என்னுடைய எண் 487) அப்பாவிடம் சொல்ல அதை தொடர்ந்து என்னிடமும் "சாரிடா தம்பி" என என்னிடம் அழுதுகொண்டே கெஞ்சிய அந்த மாலை (முரசு) நாள்  இன்றளவும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வரும் ஒவ்வொரு வருடமும் என் நினைவுகளை பின்னோக்கி வருடும்.

இவை எல்லாம் நடந்த பின்னும் மறு நாள் "தினத்தந்தி"யிலும் அதை தொடர்ந்து பள்ளியிலும்விசாரித்து ஊர்ஜிதபடுத்திகொண்டு மீண்டும் அதே பள்ளியில் விரும்பிய பாடவகுப்பில் சேர்ந்து படித்து, ப்ளஸ் டூ ரிசல்டை நானே பார்த்து தெரிந்து கொள்ளும் அளவிற்கு "புத்திசாலி"யானேன் என்பதை சொல்லவும் வேண்டுமோ?    

இந்த வருடம் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்வான,  அத்தனை மாணவ தம்பி தங்கைகளுக்கு  என் வாழ்த்துக்களையும்  தேர்வில் இந்த முறை பல காரணங்களால்  வெற்றி பெறாமல் போன தம்பி தங்கைகளுக்கு " சோர்வடைய வேண்டாம், நாளை உண்டு நமக்கு" என்றும் "முயற்சி திரு வினை யாக்கும்" என்றும், "புத்தியுள்ள மனிதர் எல்லாம் முதல் முயற்ச்சியிலேயே வெற்றி காண்பதில்லை" என்பதையும் நினைவுபடுத்தி இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.  

வாழ்க!! எங்க ஊர் "மாலைமுரசும்" "தினத்தந்தியும்"  

ஆமாம், எந்த ஊர்? .....எல்லாத்தையும் நானே சொல்லனுமா?- "அஸ்க்கு புஸ்க்கு"....

பத்தாம்  வகுப்பு பொது தேர்வு வினாக்களை விட சுலபம்தான் விடை கண்டு பிடிப்பது, முயற்சி திருவினை ஆக்கும் முயலுங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

நன்றி!

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ





8 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தனப்பால்,

      அப்பாடா, நானும் நிம்மதி பெரு மூச்சு விட்ட நாள் அது.
      வருகைக்கு நன்றி.

      கோ

      நீக்கு
  2. தங்களின் பத்தாம் வகுப்பு அனுபவம் அருமை. தாங்கள் இன்றைய மாணவர்களுக்கு சொன்ன தகவல்கள் சூப்பர்.
    ஆனால் என்னால் வடைகாண இயலவில்லை. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு மிக்க நன்றி. முயற்சி திருவினையாக்கும்.

      கோ

      நீக்கு
  3. பாலமகி பக்கங்களிலும் சில பதிவுகள் உண்டு. வாருங்கள்.

    பதிலளிநீக்கு
  4. தனப்பால்,

    அப்பாடா, நானும் நிம்மதி பெரு மூச்சு விட்ட நாள் அது.
    வருகைக்கு நன்றி.

    கோ

    பதிலளிநீக்கு

  5. தங்களுக்கு நேர்ந்த இதை போன்று சில சம்பவங்களை நான் கேள்விப்பட்டதுண்டு ஏன் என் நண்பர் ஒருவருக்கும் +2 தேர்வின்போது இப்படி நடந்ததுண்டு. பின்னர் தான் தெரிந்தது தவறு நடந்திருக்கிறது என்று அடுத்த நாள் செய்தித்தாளில் அவரின் தேர்வு எண் வந்திருந்தது. மேலும் இது போன்ற அச்சு அல்லது வேறு சில தவறுகளால் தேர்வு எண்ணை காணாமல் ஏமாற்றம் அடைந்தோர் தங்களை மாய்த்துகொண்டதையும் (ஆனால் உண்மையில் தேர்ச்சி பெற்றவர்களே) கேள்விப்பட்டு மனம் வருந்தியதும் உண்டு.

    இபொழுது உள்ள ஊடகங்களின் பெருக்கத்தால் அந்த நிலை தற்பொழுது மாறியிருக்கிறது என்பதில் ஐயமில்லை.

    அப்புறம் அந்த உங்க "ஊர்" வேலன் என்றதொரு மரங்களால் நிறைந்ததாமே, அப்படியா?

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும் உங்கள் அனுபவ பகிர்வுக்கும் நன்றி.

    ஆமாம் அது என்ன வேலன் மரம்? வேலன் என்றால் முருகன், முருங்கை மரமா??...

    நம்மகிட்டயேவா?

    நட்புடன்

    கோ

    பதிலளிநீக்கு