பின்பற்றுபவர்கள்

வியாழன், 25 ஜூன், 2015

துப்"போர்"க்கு தப்பார்க்கு துப்பாக்கி..."

குறி தப்பாது

துப்பார்க்குத் துப்பாய ....எனும் வார்த்தைகளைக்கொண்டு  துவங்கும் ஒரு திருக்குறளும் அதன் பொருளும் என்னை தவிர உங்கள் அனைவருக்கும் மிக மிக தெளிவாக தெரிந்திருக்கும்;
தெரியாதவர்கள் 'நம்ம' மகேஸ்வரியிடம் கேளுங்கள் அவர்கள் வரிக்கு வரி விளக்கி பாடம் எடுப்பார்கள்.

மேலும் இது போன்ற அறிவார்ந்த விஷயங்களை பற்றி பேசுவதும் எழுதுவதும் என்பது ஒரு சில ஞானவான்களுக்கே உரித்தான செயல் என்பதால் அதை பற்றி நான் ஒன்றும் சொல்லாமல், ஏதோ எமக்கு தெரிந்த ஓரிரு விஷயங்களை மட்டும் உங்களோடு பேசிவிட்டு போகலாம் என நினைக்கின்றேன்.

இந்த குறளை கேட்க்கும்போதெல்லாம் ஏன் திருவள்ளுவர் துப்பாக்கி எனும் வார்த்தையை உபயோகித்தார், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே  துப்பாக்கி எனும் வார்த்தையை மக்கள் சர்வ சாதாரணமாக பயன்படுத்தி இருந்திருக்கின்றனரோ?

அப்படி, அன்று அந்த  வார்த்தையை அவர்கள் பயன்படுத்தி இருந்தாலும் , இன்றைய காலகட்டத்தில் அந்த வார்த்தையின் பொருள் என்னவாக இருக்கின்றதோ அதே பொருள் படும்படியாக அவர்கள் பயன்படுத்தி இருக்க வாய்ப்பில்லை என்று தோன்றுகின்றது.

இந்த கொடூரமான கொலை கருவி முதன் முதலில் கி பி ஒன்பதாம் நூற்றாண்டில் நம் அண்டை நாடான சைனாவில்தான்  உருவாக்கி பயன்படுத்தி வந்திருந்தனர் என்ற வரலாற்று பின்னணியுடன் துவங்குகின்றது இன்றைய உயிர் வாங்கும்  அதி பயங்கர கொலை ஆயுதங்களுள்  முன்னணியில்  இருக்கும் துப்பாக்கிகள்.

சீனர்கள் தான் உலகிலேயே முதன் முதலாக துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் - "ஹூவோ யாவோ" எனும் வெடிமருந்தாகிய  ரசாயன பொருளை கண்டுபிடித்து   அவற்றை  மூங்கில் மற்றும் உலோகத்தால் செய்யப்பட்ட குழல் போன்று வடிவமைக்கப்பட்ட ஒரு கருவிமூலம் செலுத்தி அவற்றை எதிரிகளுக்கு எதிராக பயன்படுத்தி இருக்கின்றனர், எனினும் வரலாற்று ஆசிரியர்கள் கருத்துப்படி கி பி 10 ஆம் நூற்றாண்டில் தான் முதல் துப்பாக்கி சீனாவில் உருவாக்கப்பட்டது என்ற கருத்தும் நிலவுகின்றது.


அதை தொடர்ந்து கி பி 1320 வாக்கில் பீரங்கிகள் இத்தாலியர்களால் உருவாக்கப்பட்டு போர்களங்களில் உபயோகபடுத்தபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு சீனர்கள் கண்டுபிடித்த துப்பாக்கி மருந்துகளை பயன்படுத்தி போர்களங்களில் எதிரிகளை அழிக்க ஐரோப்பிய நாடுகள் துடிப்பை காட்டினாலும், அன்றைய காலகட்டத்தில் இருந்த கருவிகள் பெரும்பாலும் பயன்படுத்துபவருக்கும் கேடு விளைவித்ததாலும்  இலக்கை நோக்கி சரியாக துல்லியமாக தாக்க முடியாமல் போனதாலும் இதற்க்கு மாற்று வழி ஒன்றை சிந்தித்ததன் விளைவாக கி பி 15ஆம் நூற்றாண்டில் கொஞ்சம் நவீன அதே சமயத்தில் பாதுகாப்பான கருவி ஒன்றை தயாரித்து பிரஞ்சு நாட்டில் பயன்படுத்தியதாகவும் குறிப்புகள் காணப்படுகின்றன.

அதன் பிறகு படிப்படியாக பரிணாம வளர்ச்சியுற்று பல அதி நவீன துப்பாக்கிகள் இன்று உலகில் வலம் வந்துகொண்டிருக்கின்றன.

மிக மிக அபூர்வமாக, சொற்ப எண்ணிக்கையில் காணப்பட்ட இந்த உயிர் வாங்கும் கொலை கருவி, இன்றைய காலசூழ்நிலையில்,தீபாவளி துப்பாக்கிகளைவிட மிக எளிதாக அதுவும் பிறந்தநாள் பரிசுபொருளாகவும் ஒரு சில மேலை நாடுகளில் மக்கள்  வாங்கியும் பரிசளிக்கபட்டும் பயன்படுத்தும்   சூழ்நிலை நிலவுகின்றது.
Image result for pistol in a gift box

அதன் பலனாகவே சமீபத்தில் அமரிக்க நாட்டில்  தனது பிறந்த நாளுக்கென்று தமது "துப்புகெட்ட" தந்தையினால் பரிசளிக்கப்பட்ட துப்பாக்கியை கொண்டு " ஒரு நிறவெறி" பிடித்த 21 வயது இளைஞன் இறை வழிபாட்டில் இருந்த ஒன்பது கறுப்பின மக்களை கொன்று குவித்திருக்கின்றான்.

இந்த செய்தியை கேட்டதும் பிள்ளைகளின் பாதுகாப்பில் பெற்றவர்களுக்கு அக்கறை உண்டு என்றாலும் அதற்காக இதுபோன்ற விபரீதமான பொருட்களை பரிசளிப்பதென்பது ரொம்ப  டூ ....... மச் தான் என எண்ண தோன்றுகின்றது.

இது போன்ற பெற்றோர்களை எத்தனை "துப்பினாலும்" அவர்கள் திருந்த மாட்டார்கள். மாறாக அரசாங்கம் இதுபோன்ற ஆயுத உற்பத்திக்கும் விற்பனைக்கும் கடும்  நிபந்தனைகளையும் கெடுபிடிகளையும் அதிகபப்டுத்த வேண்டும்.

இப்படி துப்பாக்கிகளை பிள்ளைகளுக்கு  விளையாட்டு பொருள்கள் போல் வாங்கி கொடுக்கும் பெற்றோர்களே, அதே துப்பாக்கி குறி பார்த்து உங்கள் மீதே ஒருநாள் கந்தகத்தை துப்(பி)பாயும் அப்போது உங்கள் முகத்தில்  இந்த உலகம் தூவும் மழை போல் தப்பாது துப்பும்

இவ்வளவு வக்கணையாக வக்காலத்து வாங்கிபேசும் நான்  எனது பெட்டியில் இருந்த  - இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இரண்டு கைத்துப்பாக்கிகளை சென்னை விமான நிலையத்தில் எக்ஸ்ரே கருவி மற்றும் டிடெக்டர் மூலம் காவலர்கள் கண்டுபிடித்து ஏ கே 47 தாங்கிய ஆறு காவலர்கள் புடைசூழ என்னை தனி அறைக்கு கொண்டு சென்று கடுமையான விசாரிப்புகளுக்கும் சோதனைகளுக்கும்  உட்படுத்தி  , விமான நிலையத்தை பரபரப்பாக்கிய அந்த நிகழ்ச்சியை எப்போது நான் நினைக்க தோன்றினாலும் பொருள் விளங்கிக்கொள்ளும் அளவிற்கு விவரம் அறியாதவனானாலும் என் நினைவில் ஒலிக்கும் வள்ளுவனின் குரல் வழியும் குறள் இந்த:

 "துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு
  துப்பாய தூவும் மழை"

சென்னை விமான நிலையத்தில் கப்பல் ஏற இருந்த   என் மானத்தை, இனி இந்தமாதிரி செயலில் ஈடுபடமாட்டேன் என்று சுங்கம் மற்றும் விமான பாதுகாப்பு துறையினரிடம் உறுதி அளித்து விடுவிக்கப்பட்ட விஷயத்தை பிறகு சொல்கின்றேன் என்று  இப்போது சொல்லாமல் விட்டு விட்டால் இந்த பதிவை வாசிக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியா  அல்லது  என்னை ஒருமாதிரியாக நினைத்து விடுவார்களோ என்பதால் இப்போதே சொல்லி விடுகின்றேன். 

அது வேற ஒன்னும் இல்லைங்க ஊரிலிருந்து விடுமுறை முடிந்து திரும்பும்போது நண்பரின் மகனுக்கு கொடுக்கவேண்டி துபாயில் இருந்து வாங்கிவந்திருந்த வீடியோ கேமோடு இணைக்கபட்டிருந்த கைதுப்பாக்கி வடிவிலான இரண்டு பிளாஸ்டிக் சாதனம் எக்ஸ்ரே கருவியில் நிஜ துப்பாக்கிபோல் காட்ட பயந்துபோன காவலர்களுக்கு பெட்டியை திறந்து காட்டி உறுதி செய்து பிறகு அவர்கள் அந்த பெட்டியின் மேல் சில குறிப்புகள் அடங்கிய ஸ்டிக்கரை ஒட்டி சில பல ஆலோசனைகளையும் கொடுத்து , அசடு வழிந்த என்னை வழி அனுப்பி வைத்த நிகழ்ச்சிதானே தவிர நீங்கள் நினைக்க தோன்றிய(???) எந்த சமூக விரோத தீவிரவாதா நடவடிக்கையிலும் ஈடுபட்டு மானம் இழக்க நேரவில்லை என்பதை இப்போதே சொல்லி பதிவை நிறைவு செய்கிறேன்.

Image result for image of video game guns

நேரில் பார்த்தவர்களுக்கு  மட்டுமே தெரிந்த என் பால் வடியும் முகத்தையும் நேரில் பார்க்காதவர்களின் மனகண்ணில் தோன்றும் என் கபடற்ற உள்ளமும் கொண்ட நான்  ஏடாகூடமாக செய்திருக்க மாட்டேன் என்பதை நீங்கள் நம்புவீர்கள் என நான் நம்புகிறேன் , நம்புவீர்கள்தானே? 


நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ





8 கருத்துகள்:

  1. திருக்குறலில்
    ஆரம்பித்து,
    சீனர்கள்-துப்பாக்கி
    வரலாற்று தகவலுடன்,
    அமேரிக்க கொலை சம்பவத்தை
    சொன்னவிதம் சூப்பர் சார்!

    ஆமா பலமுறை அமேரிக்காவில் துப்பாக்கி நிகழ்வை பற்றிய
    செய்தியை பார்த்திருக்கேன். மக்களுக்கு நல்லதை செய்யும் அரசாங்கம் தடை விதிக்க கூடாதா?

    கடைசியில் அந்த வீடியோ கேம் து.ப்.பா.க்.கீ
    சம்பவம் ஹாஹாஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகேஷ்,

      வருகைக்கும் பதிவினை பராடியமைக்கும் மிக்க நன்றி.

      கோ

      நீக்கு
  2. தனப்பால்,

    உங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமானத்தில் மிக்க மகிழ்ச்சி.

    கோ

    பதிலளிநீக்கு
  3. பசுத்தோல் போர்த்தாத அரசனுக்கு,

    எனக்கு ஒன்னும் அதிகமா தெரியாதுப்பா,

    ஆனால் தாங்கள் சொன்னதால்,

    இதோ,

    துப்பார்க்கு துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
    துப்பாய தூஉம் மழை.
    இல்லை, இந்த குறளில் திருவள்ளுவர் துப்பாக்கியைக் கண்டுபிடிக்கவில்லை.
    இதனை இப்படியும் படிக்கலாம்,

    துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கித் துப்பார்க்குத் துப்பு ஆயதூஉம் மழை.
    இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:

    மணக்குடவர்: தன்னை யுண்பார்க்குத் தானே உணவாவதும் மழையே.

    மணக்குடவர் குறிப்புரை: இது பசியைக் கெடுக்கு மென்றது.

    பரிதியார்: வலியார்க்கு வலியுண்டாக்குவதும் மழை என்றவாறு.

    காலிங்கர்: உண்பவர் யாவர்க்குந் தானே உணவுமாய் நிற்பதூஉம் மழை என்றவாறு.

    பரிமேலழகர்: அவற்றை உண்கின்றார்க்குத் தானும் உணவாய் நிற்பதூஉம் மழை.

    பரிமேலழகர் விரிவுரை: தானும் உணவாதலாவது, தண்ணீராய் உண்ணப்படுதல். இவ்வாறு உயிர்களது பசியையும் நீர்வேட்கையையும் நீக்குதலின், அவை வழங்கி வருதலுடையவாயின என்பதாம்.
    குன்றக்குடி அடிகளார் உரை: துய்த்து வாழ்பவர்க்குத் துய்ப்புக்குரிய பொருள்களைப் படைத்தும் தானே துய்ப்புக்குரியதாகவும் அமைந்து விளங்குவது மழை. உணவுப் பொருள்கள் விளைய மழை உதவி செய்கிறது; பருகவும் பயன்படுகிறது.
    இப்பகுதிக்குப் பழம் ஆசிரியர்கள் உண்பவர் யாவர்க்கும் தானே உணவாய் நிற்பதும் மழை ஆகும் என்று உரை பகர்ந்தனர். பரிதியின் வலியார்க்கு வலியுண்டாக்குவதும் மழை என்பது புதுமையாய் உள்ளது. 'தானும் உணவாதலாவது, தண்ணீராய் உண்ணப்படுதல்' என்று பரிமேலழகர் விளக்குவார்.
    இவ்வளவு தான் என் சிற்றறிவில் உள்ளது,
    இன்னும் சரியாக கதையுடன் வேண்டும் எனில் தங்கள் தின்டுகல் தனபாலன் டிடி சார் சொல்வார்,
    ஆனாலும் பொம்ம துப்பாக்கிக்கு இவ்வளவு ஆர்பாட்டம் வேண்டாம்,
    பால் வடியும் முகத்தைப் பார்த்தும் அதிகாரிகள் விட்டது கொஞ்சம் ,,,,,,,,,,,,
    நன்றி

    பதிலளிநீக்கு
  4. ஒரு குறளுக்கு இத்தனை விளக்கங்களை , இவ்வளவு அழகாக கோர்த்து பின்னூட்டம் இட்டிருக்கும் உங்களின் தமிழ் ஆர்வமும் அதிலுள்ள ஆழ்ந்த புலமையும் உண்னையிலேயே சிறப்புடன் பாராட்ட பட வேண்டிய ஒன்று.

    ஏதொ பதிவு, ஏதோ பதில் என்றில்லாமல்,அதற்க்கு முக்கியத்துவம் கொடுத்து, நேரம் செலவிட்டு, குறிப்புகளை சேகரித்து அதுவும் பல அறிஞர்களின் விளக்கங்களையும் சிரமம் பாராமல் சிரத்தையுடன் மேற்கோள்காட்டி நீங்கள் அனுப்பி இருக்கும் இந்த பின்னூட்டம் நிச்சயம் பலருக்கும் பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

    சிற்றறிவே இத்தனை புற்றீசல்போல் புறப்படும் பொக்கிஷ செய்திகளை புதைத்து வைத்திருக்கின்றதென்றால், உங்கள் நிஜமான பேரறிவில் எத்தனை எத்தனையோ....?

    இந்த குறளுக்கு இப்படி ஒரு வலிமையான அர்த்தம் உண்டென்று விளக்கிய உங்களுக்கு என் உள்ளார்ந்த நன்றிகள்.

    அதிகம் தெரியாது என்று சொல்பவர்களுக்கு அபரிமிதமாக எல்லாம் தெரியும் என்பது நிதர்சனமான உண்மை என்பதை உங்கள் பின்னூட்டம் நிரூபிக்க தவறவில்லை.

    இந்த பால்வடியும் முகம்கொண்ட பாலகனின் பதிவில் உங்கள் ஆல் விழுது அறிவாற்றல் கால் பதித்து கருத்துரைப்பது எந்தன் பாக்கியம்.

    உங்களை என்ன சொல்லி வாழ்த்துவது?

    நன்றி

    கோ

    பதிலளிநீக்கு
  5. உவேசா பேரன் ஆகிய அரசன் எனப் பொருள் உடைய நண்பர் கோ அவர்களுக்கு...

    திருக்குறள் துப்பாக்கி என்பதை வைத்துக் கொண்டு துப்பாக்கியுடன் முடித்த உங்களுக்குத் தமிழ் தெரியாது என்றால் னீங்கள் பொய் சொல்லுகின்றீர்கள் என்று வழக்கு பதியலாம் என்று ....இந்த 007 நினைக்கிறார்கள்....அதெப்படி எங்கள் கையிலிருந்த துப்பாக்கி உங்களிடம் வந்தது...அதுவும் துபாய் வழியாக?

    பால் வடியும் முகம் இப்படி எத்தனை பேரப்பா கிளம்பி இருக்கீங்க அங்க என்னடானா அமெரிக்க மேற்குக் கடற்கரை ஓரம் ஒருத்தரு இப்படித்தான் தன்னைப் பால் வடியும் முகம் என்று ஒரு பதிவில் சொல்லிக் கொண்டார்...ம்ம்ம்ம் எப்படியோ இரண்டு ஊர்களிலும் பாலுக்குப் பஞசமில்லை என்று சொல்லுங்கள்

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கு மிக்க நன்றி.

    பாராட்டு நெகிழ வைக்கின்றது.

    எங்கள் மேல் உள்ள அன்பின் மிகுதியால் வேறு யாரும் பாலாபிஷேகம் செய்து பாலை விரயம் செய்து விடக்கூடாது என்பதாலேயே எங்கள் முகங்களில் தானாகவே பால் வடிகின்றது.
    ஊரை விட்டு அப்"பால்" இருந்தாலும் என்"பால்" நீங்கள் கொண்டிருக்கும் அன்"பால்" என் இதயத்திலும் "பால்" வார்த்து வரும் உங்களுக்கு மீண்டும் நன்றிகள்.

    கோ

    பதிலளிநீக்கு