பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 2 அக்டோபர், 2015

மனிதம் - புனிதம்

பொழுதுபோக்கு 


நண்பர்களே,

விடுமுறையில் ஊருக்கு சென்றிருந்தேன் என்பது உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும்.


கொளுத்தும் வெய்யிலில் சூரியனின் வீரிய கதிர்கள் பூமி பந்தின் மறு பக்கம் சென்று மறையும் வரை பெரும்பாலான நாட்கள், பகல் பொழுதுகள், வீட்டிலேயே இருந்து விட்டு பின்னர் மாலை நேரங்களில் வெளியில் சென்று, நண்பர்களையும் உறவினர்களையும் சந்திப்பதும் கடைகளுக்கு செல்வதுமாக பொழுது போய்கொண்டிருந்தது.

அப்படி ஒரு மாலை நேரம் "ஜெகஜோதி" (திண்டுக்கல் தனபாலனுக்கு பிடிக்குமே) யாக இருக்கும் கடை தெருவிற்கு சென்று சில பொருட்களை வாங்க பயணித்தபோது சாலை எங்கிலும் புதிதான சுவரொட்டிகள் என் கண்களை கவர்ந்தன.

கண்களை கவர்ந்ததில் முக்கிய அங்கம் வகித்தது நான் பயின்ற எனது கல்லூரியின், ("கல்லூரி கலைக்கூடம்")  பெயர் அந்த சுவரொட்டிகளில் இருந்ததுதான்.

என்ன இருந்தாலும்  "விலைமதிப்பில்லா கல்வி பாலூட்டிய பாதி தாய் அல்லவா"?

சரி என்ன விளம்பரம் என ஆர்வம் மிகுந்ததால், அடுத்து வந்த சுவரொட்டி இருந்த இடத்திற்கு மிக அருகில் வண்டி நின்றதால் படிக்க முடிந்தது.

அதாவது, நான் படித்த கல்லூரி வளாகத்தில், ஒரு பட்டி மன்றம் அடுத்த நாள் நடைபெற உள்ளதாகவும் அதன் தலைப்பு, "மதங்கள் தழைக்க பெரிதும் தேவை, சமய பணியா? சமுதாயப்பணியா?"

அனைத்து சமயங்களும் அடிப்படையில் சொல்வதெல்லாம் , மனித நேயமும் சமூக பணியும்தானே, உன்னைப்போல பிறனையும் நேசிக்க கற்றுக்கொண்டு அதை செயல் படுத்தினாலே, தங்களது மதங்களின் மென்மையும்,மேன்மையும்,  புனிதமும் சொல்லாமலே விளங்குமே , இதை ஆராய , விவாதிக்க இந்த பட்டி மன்றம் தேவையா என்ற எண்ணமும் மனதில் தோன்றியது.

உன் நண்பன் யார் என சொல், நீ யார் என்று சொல்கிறேன், எனும் சொல்போல, நீ செய்யும் செயலே உன் மதத்தின் உன்னதத்தை உலகுக்கு உணர்த்துவதோடு அவை தழைக்கவும் வழி வகுக்குமே?

இதற்கு ஏன் பட்டி மன்றம் ,  இப்போதே சொல்லலாமே தீர்ப்பை என மனதில் நினைத்தவனாக , சரி யாரெல்லாம் பேசுகின்றனர், யார் நடுவர் என பார்த்தபோது, யாருமே எனக்கு தெரிந்தவர்கள் இல்லை ஒருவர் தவிர.

அவர் தமிழ் கூறும் ஏழுலகத்துக்கும் தெரிந்தவர்.

அவர்தான் பட்டி மன்ற இளவரசன் சாலமன் பாப்பையாவின் செல்ல பிள்ளை -  பேச்சாளர் திரு. ராஜா அவர்கள்.

சரி நாளை பட்டி மன்றம் செல்லலாம் என் தீர்மானித்து அதன்படி மறு நாள் மீண்டும் பல ஆண்டுகள் கழித்து நான் என் வாழ்நாளில் சிறந்த ஐந்தாண்டுகளாக கருதப்படும் என் கல்லூரி வாழ்வின் காலங்களில் நண்பர்களோடு உலாவியும் உட்கார்ந்தும், பயின்றும் மகிழ்ந்த அந்த வளாகத்தினுள் நுழைந்தபோது உடலிலும் உள்ளத்திலும் நிகழ்ந்த அந்த இனம் புரியாத ரசாயன மாற்றங்களை என்னவென்று நானுரைப்பேன். 

கல்லூரி வளாகமே எனக்கு புதிதாக தோன்றியது,அங்கிருந்த ஆல மரத்தை தவிர , அதன் புதிய பொலிவினையும் அங்கே காலூன்றி முளைத்திருந்த புதிய கட்டிடங்களையும் பார்க்கும் போது. 

முதலில் நான் சென்று தொட்டு பார்த்தது நான் முதன் முதலில் அமர்ந்து படித்த வகுப்பறையின் பூட்டப்பட்ட கதவுகளைத்தான், கண்ணீர்  துளிகளுடனும்  என் பழைய நாட்களின்  பன்னீர் நினைவுகளுடனும்.

இப்போது பட்டி மன்றம் நடக்க  இருந்த மண்டபம் நோக்கி நடக்க ஆரம்பித்தேன், அங்கே என்னோடு பயின்ற பல ஊர்களை   சார்ந்த என் நண்பர்கள் சிலரையும் காணும் வாய்ப்பு கிடைத்ததை பாக்கியமாக கருதி அவர்களோடு உரையாடும்போது அவர்களும் நமது கல்லூரியின் பெயரை சுவரொட்டியில் பார்த்ததால் வந்ததாக சொன்னார்கள்.

பிரமாண்டமான அரங்கம், மேடையில் ஏழு  பேர் அமர்ந்திருந்தனர், அவர்களுள் நடு நாயகமாக திரு.ராஜா அமர்ந்திருக்க, வரவேற்பும் பொன்னாடைகளும் மாலைகளும் மேடையை ஆக்ரமிக்க  பட்டி மன்றம் கலை கட்டியது.

பசித்தவருக்கு ஒரு வேளையேனும் உணவளித்தாலோ, அல்லது ஆடை இல்லாதவருக்கு ஆடை கொடுத்து உதவினாலோ, சுகவீனமாய் இருப்போரை உள்ளார்ந்த கரிசனையோடு பார்த்து விசாரித்தாலோ, அல்லது மனிதகுலம் எங்கெல்லாம் கஷ்டப்ப்படும்போதெல்லாம் அவர்களுக்கா பரிதவித்து ஒரு சொட்டு கண்ணீர் விட்டாலோ, படிக்க வசதி இல்லாத ஏழை பிள்ளைகளின் படிப்பிற்கு முடிந்த அளவிற்கு உதவி செய்தாலோ , அது இறைவனுக்கு செய்யும் தொண்டாக கருதபடுகின்றது, அப்படி செய்யும் எல்லோருக்கும் மத நம்பிக்கையோ இறை நம்பிக்கையோ இல்லாமல்கூட இருக்கலாம் ஆனால் அவர்கள் செய்யும் இது போன்ற சேவைகள்தான் சமூகபணிகள்  என கருதபடுகின்றன.

மதங்களை தாண்டி மனிதம் போற்றப்படவேண்டும், மதிகப்படவேண்டும். இப்போதெல்லாம் ஆங்காங்கே நடைபெற்றுக்கொண்டிருக்கும் பட்டி மன்றங்கள், பெரும்பாலும் பொழுதுபோக்கு அம்சங்களாகவே இருப்பதால்தான் இதுபோன்ற தலைப்புக்கள் தேர்ந்தெடுக்கபடுவதாக நான் கருதுகின்றேன், மாறாக இவற்றால் எந்த சமூக நலனும் ஏற்படுவதாக எனக்கு தோன்ற வில்லை.

நண்பர்களோடு  இணைந்து பட்டி மன்ற விவாதங்களை கேட்டுவிட்டு தீர்ப்பிற்கு முன்னரே நண்பர்கள் அனைவரும் மண்டபம் விட்டு வெளியில் வந்து கல்லூரி வளாகத்தின் உள்ளேயே இருந்த தேநீர் கடையில் தேநீர் பருகிக்கொண்டே, பல பழைய நினைவுகளை அசை போட்டுவிட்டு, கல்லூரி வளாகம் விட்டு வெளியில் வரும்போது நான் கொஞ்சமும் நினைக்கவில்லை,இன்னும் ஒருவாரத்தில் வேறொரு நிகழ்ச்சிக்காக இதே கல்லூரி விழா அரங்கிற்கு நான் வரபோகின்றேன், சிறப்பு விருந்தினனாக, என்று.

அந்த நிகழ்ச்சிபற்றி   பிறகு சொல்கிறேன்.

அதுவரை.

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ



10 கருத்துகள்:

  1. அடே .. .டே!
    நம் கல்லூரியில், அதுவும் நம் அரங்கில் நடந்த பட்டிமன்றத்தில் தாம் அவையிலா ?
    ஐயகோ .. மேடையில் அல்லவா இருந்து இருக்கவேண்டும் . அவையோர் கொடுத்து வைத்தது அவ்வளவு தான் .

    அருமையான பதிவு நண்பரே.. இதை படித்தவுடன் கிட்டதட்ட 30 வருடங்களுக்கு முன் இதே கல்லூரியில் வணிகவியல் துறையில் நடந்த "விற்க அதிக தேவை விளம்பரமா - விற்பனை திறனா" என்ற பட்டிமன்றத்தில் தாம் தலைமை தாங்கிய அணியில் அடியேன் பேசியது நினைவிற்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி நண்பா. ஆம் நினைவிருக்கிறது, வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவது " விளம்பரமா? விற்பனை திறனா?" நம்ம மொட்டை - காமராஜும் நினைவிற்கு வந்து செல்கின்றார், உங்கள் பின்னூட்டம் வாயிலாக.

      கோ

      நீக்கு
  2. அனைத்து சமயங்களும் அடிப்படையில் சொல்வதெல்லாம் , மனித நேயமும் சமூக பணியும்தானே, உன்னைப்போல பிறனையும் நேசிக்க கற்றுக்கொண்டு அதை செயல் படுத்தினாலே, தங்களது
    மதங்களின் மென்மையும்,மேன்மையும்,  புனிதமும் சொல்லாமலே விளங்குமே , இதை ஆராய , விவாதிக்க இந்த பட்டி மன்றம் தேவையா என்ற எண்ணமும் மனதில் தோன்றியது.////

    உங்கள் பட்டிமன்ற தீப்பு அருமை சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு மிக்க நன்றி மகேஷ்.

      இப்போதெல்லாம் பட்டிமன்றங்கள் , தீர்ப்புகள் எளிதில் யூகிக்கும்படியான தலைப்புகலில்தானே நடைபெறுகின்றன.

      கோ

      நீக்கு
  3. மனதில் பட்டதை ஒளிவு மறைவின்றி தந்தமைக்கு ஒரு சபாஷ் நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பா,

      நாம் எப்போதும் அப்படித்தானே.

      வருகைக்கு மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு
  4. ஆஹா வணக்கம் அரசே,,,
    தாங்கள் எப்ப நடுவர் ஆனீர்கள்,,,,,,
    மனிதம் காக்கப்பட வேண்டும் அது தான் அனைத்து மதமும் சொல்வது,,,,,,,
    ஆனால் மதம் பெயரால் தான் மனிதம் செத்துக்கொண்டு இருக்கிறது,,,,,,,,,
    வலைப்பதிவர் விழா கையேட்டிற்கு தகவல்கள் அனுப்பினீர்களா? விவரம் தங்கள் நண்பர் திண்டுக்கல் தனபாலன் சார் கேட்கவும்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேராசிரியருக்கு,

      நாம் நடுநிலைமையில் இருப்பதுதான் நல்லது, யார் பக்கமும் ஓவரா சாய்ந்துவிடாமல்.

      வருகைக்கு மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு
  5. மனிதம் என்பதற்கு இறையுணர்வோ, மதமோ, சாதியோ தேவையில்லை. தன்னலமற்ற அன்பு இருந்தால் போதும். அன்பே கடவுள் என்பதற்கிணங்க, நாம் மனிதம் போற்றினாலே அங்கு கடவுள் தானாகவே வந்து அமர்ந்து விடுவார்....

    சரி திரு ராஜா அவர்களைச் சந்திக்க முடிந்ததா? அந் நிகழ்வு என்னவோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      மனிதம் போற்றுதலே மகேசனை போற்றுதற்கு சமம் எனும் அருமையான கருத்தை பின்னூட்டம் வாயிலாக ஆமோதித்தமைக்கு மிக்க நன்றிகள்.

      ஒரு மேடையில் ஒரு ராஜாதான் இருக்கணும் என்பதற்காக நான்(கோ) மேடையில் இருந்த ராஜாவை மேடையேறி சந்திக்காமல் வந்துவிட்டேன்.

      தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.

      கோ

      நீக்கு