பின்பற்றுபவர்கள்

வியாழன், 8 அக்டோபர், 2015

பிளாஸ்டிக் சர்ஜெரி! - பிளாஸ்த்திரி!!

காகித கண்துடைப்பு!!


நண்பர்களே,

வளர்ந்து வரும் இன்றைய நவீன மருத்துவ சிகிச்சை முறைகளில் எத்தனையோ புதுமையான விஷயங்களை நாம் கண்டும் கேட்டும், படித்தும் அறிந்திருக்கின்றோம்
.

பண்டைய காலங்களில் மனிதனின் அறிவும் உலகின் அறிவியலும் சரிவர வளராத காலங்களிலும் மனிதனுக்கு நோய்கள் வந்தன,விபத்துக்கள் நேரிட்டன அதனால் உடல் உறுப்புகளை சேத படுத்திக்கொண்டதோடு அவற்றை இழக்கவும் அது மட்டும் அல்லாமல் தமது உயிரையும் இழக்கும் சூழ் நிலைகளை  பார்த்து, அது போன்ற விபத்துகளில் சிக்கிய சக மனிதனுக்கு நன்மை உண்டாகும்பொருட்டு எத்தனையோ மூலிகைகளையும் சிகிச்சை முறைகளையும் அவனது அறிவிற்கும் அவனை சுற்றி கிடைக்கப்பட்ட பொருட்களையும் கொண்டு சிகிச்சை அளிக்க முற்பட்டான்.

ஆனால் அந்த  சிகிச்சை முறைகள் பலவேளைகளில் மரணத்தை விட கொடுமையான வலியையும்   வேதனையையும் உண்டாக்ககூடியதாக இருந்ததாகவும் அதுபோன்ற சிகிச்சைகளை மேற்கொள்ள தமக்கு துணையாக சில கூறிய கற்களையும் கொடூர ஆயுதங்களையும்  கூட பயன்படுத்தியதாக மருத்துவ பரிணாம வளர்ச்சியின் பின்னோக்கிய வரலாற்று பயணங்களில் நாம் அறிய முடிகிறது.

ஆனால் தற்போது நாம் வாழ்ந்து வரும் இந்த நவீன அறிவியல் உலகில் பெரும்பாலான மருத்துவ சிகிச்சை முறைகள் முறை படுத்தபட்டவைகளாகவும் பாதுகாப்பானதாகவும், துரித பலனளிக்கத்தக்கவைகளாகவும் இருப்பது நாம் கொடுத்து வைத்தவர்கள் என்று நம்மை நாமே பாராட்டிகொள்ளும் ஒரு உன்னத நிலைமை என்று சொன்னால் அது மிகை அல்ல.

இத்தகைய நவீன விஞ்ஞான வளர்ச்சியின் ஒரு அங்கமாக - அறுவை சிகிச்சையின்  ஒரு பரிணாமமாக திகழ்வது,"பிளாஸ்டிக் சர்ஜெரி" எனும் ஒரு உன்னத சிகிச்சை முறை.

உலகெங்கிலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிர்ப்பு வலுத்து கொண்டிருக்கும் இந்த கால சூழ்ந்நிலையில், அறுவை சிகிச்சையின் பெயரில் பிளாஸ்டிக் இருப்பது இங்கே யாருடைய கண்ணையும் உறுத்துவதாக தெரிய வில்லை.  ஏனென்றால், இந்த சிகிச்சையின் பெயர் மட்டுமே அப்படி, தவிர ப்ளாஸ்டிக்குக்கும் இந்த அறுவை சிகிச்சைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

விபத்துக்களில் பாதிக்கப்பட்டு உடலின் ஒரு பாகத்தின் சில திசுக்களை இழந்தவர்களுக்கு அவரின் உடலில் இருந்து பாதிக்கபடாத பகுதியில் உள்ள திசுக்களை எடுத்து க்ராப்டிங்(Skin Graft )  மூலம் பாதிக்கபட்ட இடத்தை மூடி இழப்பு ஏற்பட்ட அந்த இடத்தை சரி செய்யும் முறையே பிளாஸ்டிக் சர்ஜெரி எனப்படுகின்றது.

இதுபோன்ற பிளாஸ்டிக் சர்ஜெரிகளை இந்த காலத்தில் தமது குறிப்பிட்ட சில உடல் அங்கங்களை அழகு படுத்திக்கொள்ளவும் (காஸ்மடிக்) பயன்படுத்தி கொள்கின்றனர்.

இதில் சில வேடிக்கை விநோதங்களும்  நிகழ்வதுண்டு, அதாவது அரசனை நம்பி புருஷனை விட்ட (இது அரச மர மகிமை அல்ல- நோட்  திஸ் பாயிண்ட்) கதையாக - உள்ளதும் போனதட......போன்று,  கிளி போல இருந்தவர்கள் இது போன்ற சிகிச்சைகளுக்கு பின் குரங்குகளாக காட்சி அளிப்பதையும் நாம் பார்க்க தவறுவதில்லை.

மனிதன் எப்படி தமது அங்க அழகுகளை மேபடுத்திக்கொள்ள பிளாஸ்டிக் சர்ஜெரியை நாடுகின்றானோ அதேபோல இந்த உலக அழகையும் மேம்படுத்த இதே பிளாஸ்டிக் சர்ஜெரியை சில நாடுகள் மேற்கொண்டு வருகின்றன.

அத்தகைய நாடுகளுள் பிரிட்டனும் ஒன்று. 

பொதுவாக பிளாஸ்டிக் சர்ஜெரிகளை அதற்கென பிரத்தியேகமாக படித்து பட்டம் பெற்று, அனுபவம் நிறைந்த மருத்துவர்களே மேற்கொள்வார்கள். ஆனால் இங்கே  எந்த மருத்துவ கல்வித்தகுதியும் இல்லாத அரசியல் வாதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஏக மனதாக முடிவெடுத்து இந்த சிகிச்சையை கடந்த திங்கள் கிழமை முதல் நாடெங்கிலும் தீவிரமாக  மேற்கொண்டு வருகின்றனர்.

ஆம் நண்பர்களே, பெருகிவரும் சுற்று சூழல் மாசு பெருக்கத்தையும் ,உலக வெட்பமயமாக்கலை  ஓரளவிற்கு கட்டுபடுத்தவும், பிளாஸ்டிக் பொருகளை, அதிலும் தினமும் ஏகத்துக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளின் எண்ணிக்கையையும் அதன் பயன்பாட்டையும் குறைக்கும் பொருட்டும் , ஏற்கனவே வீட்டில் இருக்கும் பிளாஸ்டிக் பைகளையே மறு சுழற்சி மூலம் கூடுமான வரை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் பொருட்டும், கடந்த திங்கட் கிழமை முதல் பிரிட்டனில் உள்ள எந்த கடைகளும் தங்கள் கடையின் பிளாஸ்டிக் பைகளை இலவசமாக விற்பதை தடை செய்து, தேவைபடுவோருக்கு கட்டணம் வசூலித்து பிளாஸ்டிக் பைகளை விநியோகிக்கும்படி சட்டம் போட்டு இருக்கின்றனர்.

நல்ல விஷயம் தான், ஆனால்,மது அருந்துவதையும், புகை இலை, சிகரெட்டு போன்ற வஸ்த்துக்களின் உபயோகத்தை கட்டுபடுத்தி மக்களின் நல வாழ்வுக்கு வகை செய்வதாக கருதி அத்தகைய   வஸ்த்துக்களின் உற்பத்தி வரி, கலால் வரி, சுங்க வரி , ஏற்றுமதி இறக்குமதி வரிகள் உயர்த்தியும் அவற்றை பயன் படுத்துவோரின் எண்ணிக்கையோ பயன்பாட்டின் எண்ணிக்கையோ குறைந்ததாக தெரியவில்லை.

ஒருவேளை இந்த பிளாஸ்டிக் பை விஷயமும் அப்படித்தான் ஆகுமோ என்னமோ? ஒரு பையின் விலை நம்ம ஊர் காசுக்கு 5.00 ரூபாய்.

இப்படி பிளாஸ்டிக் பைகளுக்கு விலை வைத்து விற்கபடுவதை காட்டிலும் அவற்றை முற்றிலுமாக தடை செய்து சட்டம் விதித்தால்தான் என்ன? இது ஏதோ உள்காயத்திற்கு, உடம்பு மேல பிலாஸ்த்திரி போட்டது மாதிரி அல்லவோ  இருக்கிறது?

இங்கே இதில் ஏதேனும் கண்துடைப்பு நாடகங்களும் உள்குத்து உள்காய( ம்)விவகாரங்களும் இருக்குமோ என்னமோ, நமக்கு எதுக்குங்க பெரிய இடத்து பொல்லாப்பு, அப்புறம் நாம் பதிவின் துவக்கத்தில் சொன்ன அந்த நிஜமான பிளாஸ்டிக் சுர்ஜெரிக்கு போக நேர்ந்துடபோகுது, இருக்கின்ற  மூஞ்சி போதாதுன்னு.

பிளாஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்ப காலத்தில், அதன் வலிமை, உழைக்கும் தன்மை, சன்னம் , எளிமை,மலிவு , நீடித்த பயன்பாடு போன்ற எண்ணற்ற குணநலன்களால்  அது மனித குலத்திற்கு ஒரு வர பிரசாதமாக விளங்கியது, ஆனால் வர வர, அதுவே மனிதனின் வாழ்வாதாரமானபூமியின் வளமையை மழுங்கடித்து  மனிதக்கு மட்டுமல்லாது, விலங்குகள், பறவைகள், நீர்வாழ் பிராணிகள் அனைவருக்கும் நஞ்சினை விளைவிக்கும் ஒரு அரக்கனாக - பிரசாதத்திற்குள் ஒரு பீரங்கியாய்  மாறும் என்று யாருமே நினைக்கவில்லை.

Image result for pictures of plastic bags

பின் குறிப்பு:  சுமார் 500 ஆண்டு களுக்கு முன் வாழ்ந்த நம் முன்னூர் யாரேனும் பிளாஸ்டிக் பைகளையோ ,பிளாஸ்டிக் பொருட்களையோ பயன் படுத்தி அவற்றை இந்த பூமி பந்தின் எதோ ஒரு மூலையில் தூக்கி எரிந்து விட்டு போய் இருந்தால் அந்த பைகள் இன்னமும் மக்கிபோகாமல் அப்படியே இருக்கும் என்பது பிளாஸ்டிக்கின் வாழ்நாளை - ஸ்த்திரதன்மையை  நமக்கு புலபடுத்துகின்றது. 

முடிந்தவரை பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்ப்போம், வருங்கால நம் சந்ததியினருக்கு வளமான பூமியை விட்டுச்செல்வோம்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ

4 கருத்துகள்:

  1. வணக்கம் அரசே,
    நல்ல சமூக அக்கரையுள்ள பகிர்வு,,
    உண்மைத்தான் நெகிழி பயன்பாடு என்பது இன்று பெருகிவிட்ட ஒன்று. இதன் தன்மைத் தெரியாமல் நாமும் அதனுள் ஒன்றிப்போய் விட்டோம், மஞ்சப்பை என்ற வரிகளை நாம் கேவலமாக நினைத்தோம். ஆனால் விஷத்தன்மை நமக்குள்,,,
    முடிந்தவரை நெகிழிப் பயன்படுத்துதல் தவிர்க்க வேண்டியது தான்.
    நல்ல பகிர்வு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேராசிரியரே,

      வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.

      கோ

      நீக்கு
  2. இந்த சிகிச்சையின் பெயர் மட்டுமே அப்படி, தவிர ப்ளாஸ்டிக்குக்கும் இந்த அறுவை சிகிச்சைக்கும் எந்த சம்பந்தமும்
    இல்லை.//



    ஆஹா, இத்தன நாலா நான் பிளாஸ்டிக் சர்ஜெரி என்றால் பிளாஸ்டிக் வெச்சு...
    ம்ம்ம் புதிய தகவல் சார்!

    பதிலளிநீக்கு