பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 17 அக்டோபர், 2017

ஷோலேக்கு பீச்சே..க்யா ஹே??

பார்க்கலாமா ??!! 
நண்பர்களே,

முன் பதிவிதை வாசிக்க  ஹி(இ)ந்திய   பெருமை!!.

அடுத்து Dabaang என்னும் திரைப்படத்தின் சண்டை காட்ச்சிகளை தத்ரூபமாக மேடையில் நடித்து காட்டிய விதம் மிக மிக அருமை.

காதலியை கடத்திச்சென்ற தீவிரவாதிகளிடமிருந்து காவல்துறை அதிகாரியான காதலன்(!!) பல வீர தீர சாகசங்களை செய்து தன காதலியை(!!) மீட்பதாக அமைக்கப்பட்டிருந்த  மேடை காட்சிகள்  திரைப்படம் பார்பதுபோன்ற பிரமிப்பை ஏற்படுத்தியது.

நாடகம் என்றாலே திரை சீலைகள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்ற சாசன கட்டளைகளின் முகத்திரையை கிழித்து, திரை மூடி காண்போரை காக்கவைத்து மேடை அலங்காரங்களையும் தோற்றங்களையும் மாற்றி பின்னர் திரையினை விலக்கி, காட்சிகளை நடித்துக்காட்டும் பழங்கால முறைமைகளை மாற்றி நம் கண் முன்னே அடுத்தடுத்த காட்சிகளை , திரைப்படம் போல நிகழ்த்தி காட்டிய விதம்  மெய்யாலுமே மெய் சிலிர்க்க  வைத்தது  பாராட்டிற்குரியது.

உண்மையான ஜீப்பில் வருவதும் , கோடவுனில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்  பெட்டிகளும் பொருட்களும் நிறைந்திருக்கும் இடத்தில், வெடிகுண்டுகள் வீசுவதும் துப்பாக்கி சுடுவதும், தீச்சுவாலைகள் கொழுந்துவிட்டு எரிவதும்,  பறந்து பறந்து எதிரிகளை தாக்குவதுமாக அமைக்கப்பட்டிருந்த காட்சிகள் சிறிதேனும் தொய்வின்றி நடத்தி காட்டப்பட்டன.

கிடுகிடுவென  கோடவுனின் மேல் தளத்திற்கு தாவி செல்வதும் அங்கிருந்து வீழ்த்தப்பட்ட எதிரிகள் தலை குப்புற விழுவதும் , கட்டிபோடப்பட்டிருக்கும் காரிகை  கதறுவதும் தன்னை விடுவித்துக்கொள்ள முயல்வதும் அப்படியே தத்ரூபமாக நடித்துக்காட்டப்பட்டது

இடையிடையே பாட்டும் நடனமும் நகைச்சுவைகளும்வேறு நம்மை கூடுதல் மகிழ்ச்சிக்குள்ளாக்குகின்றன.

கதாநாயகன் சல்மான் கான் போன்ற உருவ  ஒற்றுமை  கொண்ட நடிகரின் நடிப்பும் உடல் மொழியும் அசல் சல்மான் கானையே நம் முன் நிறுத்துகின்றது.

எனினும் அவர் உணமையான சல்மான் கான் இல்லை என்பதை  ஒருமுறைகூட தனது சட்டையை கழட்டி போடாமல்  இருந்ததன் மூலம் அந்த நடிகரே உறுதி செய்தார்.

Image result for dabaan g movie in dubhai bollywood stage images

Dabaang  a big bang!!.


மற்றுமொரு காட்சிகூடத்தில் லேசர் துப்பாக்கிகளுடன் திறந்த தொடர் வண்டியில் பயணித்தபடியே கொள்ளையர் கூட்டத்தை பார்வையாளர்களே சுட்டு வீழ்த்தும்படியான உண்மை துப்பாக்கிகளின் சத்தத்துடன் கூடிய   மேலும் ஒரு  பிரமிப்பு.

அதை அடுத்து...

கொடுங்கோல் வில்லன் கப்பார் சிங்கின் கொள்ளை கூட்டத்தை  முன்னாள் காவல் அதிகாரியான சஞ்சீவ் குமாரின்  ஆலோசனைப்படி  போராடும் சிறை தண்டனை கைதிகளான , தர்மேந்திரா மற்றும் அமிதாப்பின் நடிப்பு  முப்பரிமாண திரையில் சிறப்பாக காட்டப்படும் புகழ்பெற்ற ஷோலே திரை காட்சிகள்.

குறிப்பாக ரயில் கொள்ளையர்களின் அட்டகாசங்களை எதிர்த்து போராடும் காட்சிகள் இன்னமும் நம்மை இருக்கையின் முனையில் அமர செய்கிறது. 

வாயாடி யாக வலம் வரும் ஹேமா மாலியின் அட்டகாச நடிப்பும் அமைதியே உருவாக அலட்டிக்காமல் தமது ஆழ்மனதின் உணர்வுகளை அற்புதமாய்  வெளிக்காட்டும் ஜெயா பாதுரியின் நடிப்பும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் சலிப்பை ஏற்படுத்தாமல் அடுத்து என்ன அடுத்து என்ன என்ற விறுவிறுப்போடு நகர்ந்து செல்லும் காட்சி அமைப்புகள் அபாரம். 

வில்லனால்  ஆபத்தில் சிக்கி இருக்கும் கதா நாயகர்களை காப்பாற்ற  அருகிலிருக்கும் கை துப்பாக்கியை எடுத்து தங்களிடம் வீசும்படி எவ்வளவோ கெஞ்சியும், வேண்டியும் தங்கள் உயிரை காப்பாற்ற மனமில்லாதவராக  தங்களுக்கு உதவாதபடிக்கு அமைதியாக இருக்கும் முன்னாள் காவல் அதிகாரியின் அலட்சிய போக்கை கடுமையாக சாடும் கதா நாயகர்களுக்கு தான் போர்த்தி இருந்த சால்வையை கீழே நழுவ விட்டு , தமது  இரண்டு கைகளும் ஏற்க்கனவே வில்லனால் வெட்டப்பட்டதால் தாம் அவர்களுக்கு உதவ முடியாமல் போனதை   பிளாஷ் பேக்கோடு சொல்லி கதையில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தி விறுவிறுப்பை கூட்டும் அந்த ஷோலேவிற்கு பீச்சே இத்தனை சோகங்களும் காதலும் , மோதலும் இருப்பதை சிறப்பான காட்சி அமைப்புகளின்மூலம் கண்டு ரசிக்க முடிந்தது.

Image result for sholey movie in dubai bollywood images


ஓடும் ரயிலை குறிவைத்து அதன் பக்கவாட்டில் பயணிக்கும் கொள்ளையர் கூட்டத்தினரின்  குதிரைகளின் வேகமும் அவற்றின் குளம்படி சத்தங்களும் நம் மண்டை ஓட்டையும் ஊடுருவி சென்று பரவசத்தை ஏற்படுத்துகின்றது.

சாதாரணமாக பார்க்கும் திரைப்பட காட்சிகளுக்கும் மெருகேற்றப்பட்ட பல பரிமாண  காட்சிகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை வார்த்தையால் சொல்வது கடினம்.

Image result for sholey movie in dubai bollywood images

ஷோலே - இனி வருமா இதுபோல?.

அடுத்து என்னை பிரமிக்க வைத்த நிகழ்ச்சிகளும்  காட்சிகளும் ஒரு சிறிய இடைவெளிக்கு பின்....

அதுவரை..

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ.

6 கருத்துகள்:

  1. ஷோலே நினைக்கும்போதே அந்த நினைவுகளும், காட்சிகளும் மனதின் முன் வந்துநிற்கும். அருமையான படம்.//இனிமையான தீபாவளி வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா.. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

      கோ

      நீக்கு
  2. பிரமிப்பாகத்தான் இருக்கிறது. தங்கள் வர்ணனை அதையும் விட அருமை. வளைகுடா நாடுகளில் ஹிந்தி அவர்களுக்குப் புரியும் என்பதால் ஹிந்தி ஆட்சியோ?!! இந்தியா நீங்கள் சொல்வது போல் ஹிந்தியா..

    ஆப்பிரிக்க நாடுகளில் கூட எல்லா இந்தியா என்றாலே உடனே அவர்கள் சொல்லுவது எல்லா கான்களையும் தெரியும் படங்கள் பார்க்கிறோம் என்று சொல்லுகிறார்கள்!!

    அடுத்த தங்கள் வர்ணனைகளுக்கு காத்திருக்கிறோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர் வருகைக்கு நன்றிகள்.

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

      கோ

      நீக்கு
  3. தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள் நண்பரே

    பதிலளிநீக்கு