பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 20 அக்டோபர், 2017

அரிசியில் மட்டுமா...?

காபி கொட்டையிலும்தான்...

நண்பர்களே,

நேற்று   வெளி ஊர்   செல்லும்  கோச் பேருந்து நிலையம் வந்தேன் பயணம் மேற்கொள்ள.

உரிய இடத்தில் பெட்டிகளை வைத்துவிட்டு அருகிலிருந்த சிற்றுண்டி நிலையத்திலிருந்து காபி வாங்க எத்தனித்தேன்..

அந்த தருவாயில் எனக்கு முன்னே ஒரு நடுத்தர வயது மனிதர் இரண்டு  காபி கப்புகள் வைக்கப்பட்டிருந்த ஒரு அட்டை ட்ரேவுடன் என்னை கடந்து ஒரு இரண்டு இருக்கைகள் தள்ளி  ஏற்கனவே அமர்ந்திருந்த அவரது மனைவியிடம் ஏதோ பேசிவிட்டு காலியாக இருக்கும் இருக்கையில் அமர  மீண்டும் என் அருகில் வந்தார்.

கையில் இருந்த இரண்டு காபி கப்புகளுடன்   வந்து அமர இருந்தவரை பார்த்து, சும்மா - தமாஷாக...... " எனக்குதான் காபி கொண்டு வருகின்றீர்களோ  என நினைத்தேன்" என்று புன்னகையுடன்  சொன்னேன்.

இப்படி நான் சொல்லி முடிக்குமுன்னே அவர், "  எடுத்துக்கொள்ளுங்கள்" என என்னிடம் நீட்டினார்.

ஏதோ அவரும் என்னைப்போலவே சும்மா தமாஷாக சொல்கிறார்  என நினைத்து  சிரித்துக்கொண்டே, நான் காபி வாங்கத்தான் இதோ போகிறேன்  நன்றி  என்றேன். 

அவரோ, " நான் உண்மையாகவேதான் சொல்கிறேன், தயவாக எடுத்துக்கொள்ளுங்கள்" என்றார்.

அப்போதும் நான் அதையும் தமாஷாகவே நினைத்தேன்.

ஆனால்  முன் பின் தெரியாத அவரோ, " நண்பரே, நான் உண்மையிலேயேதான் சொல்கிறேன், எனக்கும் என் மனைவிக்குமாக இரண்டு காபி வாங்கினேன் , என் மனைவி தமக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டார், நானும் இப்போது என்ன செய்வது  இரண்டு காபிகளை நான் ஒருவனே  குடிக்கமுடியாதே என்று நினைத்துக்கொண்டே அமர நீங்கள் என்னிடம் பேசியது எனக்கு மகிழ்சியை அளிக்கின்றது.

தயவாக எடுத்துக்கொள்ளுங்கள் என அன்பாக வேண்ட, மகிழ்சி   கலந்த வியப்புடன் அவரது மனைவியை பார்க்க அவரும் ஆமாம்  இத்தனை காலையில் அதுவும் பயணம் துவங்க இருக்கும் தருணத்தில் எனக்கு காபி  வேண்டாம் என்று சொன்னது உண்மைதான், நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் என சொல்ல .... பெரும் ஆச்சரியத்துடனும் இன்ப அதிர்ச்சியுடனும் அந்த காபியை எடுத்துக்கொண்டு அவருக்கு நன்றி சொல்லிவிட்டு பருக ஆரம்பித்தேன்.

காபியை பருகிக்கொண்டே அவரிடம் பேசிக்கொண்டிருந்த எனக்கு மனதில் தோன்றிய ஒரு கூற்று:

"அரிசியின் தலையில் அவனவன்  பெயரை ஆண்டவன் எழுதி வைத்திருக்கின்றான்" என்பதுதான்.

கடல் கடந்து வந்து கடந்த ஆறு மாத காலங்களாக சுமார் 18  நாடுகளை சுற்றி பார்த்துவிட்டு இப்போது இங்கிலாந்தில் சில நாட்கள் தங்கும்படி வந்திருந்த அந்த மனிதர் மூலமாக கொடுக்கப்பட்ட அந்த காபியை பருகிக்கொண்டிருந்த எனக்கு வேறு ஒரு விஷயமும் மனதில் பட்டது.

அதாவது அரிசியில் மட்டுமல்ல அந்த காபி கொட்டையிலும் எனது பெயர் எழுதப்பட்டிருந்தது என்று.

பல வருடங்களுக்கு முன் ஊரில் நடந்த அரசு பொருட்காட்சி வளாகத்தில் அரிசியில் என் பெயரை எழுதி அதை திரவம் நிரம்பிய ஒரு சிறிய பாட்டலில் அடைத்து வாங்கியபோது தமாஷாக என் நண்பர்கள் சொன்னதும்  என் நினைவில் வந்துபோனது.  அதாவது, " இந்த அரிசியில் உன்னுடைய பெயரை ஆண்டவன் எழுதவில்லை இந்த கடைக்காரர் எழுதி இருக்கின்றார்" என.

நான் செல்ல வேண்டிய கோச் வந்ததும் அதில் ஏறுவதற்கு முன் அந்த நல்ல மனிதரை கட்டிப்பிடித்து மீண்டும் நன்றி சொல்லி அவரது பயணத்தை வாழ்த்தி என் பயணத்தை தொடர்ந்தாலும் என் மனதில் அவரது செயலும் அன்பும் என்றும் இனிய நினைவுகளாக பயணித்துக்கொண்டே இருக்கும். 

மனிதர்களை பார்ப்பதே  அபூர்வமாகிவிட்ட இந்த கால கட்டங்களில் இதுபோன்று நல்ல மனிதரை காண கிடைத்தது என் பாக்கியமே.

தலைப்பையும் உப தலைப்பையும் படித்துவிட்டு ஏதோ பிளாஸ்டிக் காப்பி கொட்டையைப்பற்றி சொல்லப்போகிறேன் என்று நினைத்தவர்களுக்கு ஒரு நிம்மதி ஏற்பட்டிருக்கும் நினைக்கின்றேன்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ

5 கருத்துகள்:

  1. ஹாஹாஹாஹா பிளாஸ்டிக் காப்பி கொட்டை என்று நினைக்கவில்லையே!!! ஹிஹிஹிஹி...ப்ளாஸ்டிக் அரிசி என்பதெல்லாம் மறந்தே போய்விட்டது..

    நல்ல பதிவு. மனிதம் இன்னும் உயிருடன் இருக்கிறது நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள்..என்பது உண்மை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

      ஆம் (உங்களைப்போன்று) நல்ல மனிதர்கள் இந்த உலகில் இருந்துகொண்டேதான் இருக்கின்றனர்.

      இதுபோன்ற மனிதாபிமான நல்ல செயல்களை அனைவரும் "காப்பி" அடித்தல் நல்லதுதான்.

      கோ.

      நீக்கு
  2. அரிசியின் தலையில்..கதை கேட்டுள்ளேன். இப்போது உதாரணத்துடன் பார்த்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

    ஆம் (உங்களைப்போன்று) நல்ல மனிதர்கள் இந்த உலகில் இருந்துகொண்டேதான் இருக்கின்றனர்.

    இதுபோன்ற மனிதாபிமான நல்ல செயல்களை அனைவரும் "காப்பி" அடித்தால் நல்லதுதான்.

    கோ.

    பதிலளிநீக்கு